இடிந்து விழுந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டில் இடிந்து விழுந்த வடகாடு வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வாய்க்கால் பாலம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள வடகாடு பாசன வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலின் 5-ம் எண் பிரிவு பாசன வாய்க்கால் அருகே பிரதான வாய்க்காலின் குறுக்கே ஆம்பலாப்பட்டு வடக்கு உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போக்குவரத்து வசதியை பெறும் வகையில், கடந்த 1935-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.
இடிந்து விழுந்தது
இந்த பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் இந்த பாலத்தில் பொதுமக்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இடிந்து விழுந்த பாலத்தின் மேல் பகுதியில் கிராம மக்கள் மின்கம்பங்களை அடுக்கி, இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட சில அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இவ்வழியே செல்ல முடியாமலும், விவசாய விளைநிலங்களுக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முடியாமலும் பாதிப்படைந்துள்ளனர்.
கிராம மக்கள் அவதி
மேலும் பக்கத்து ஊர்களாகிய தொண்டராம்பட்டு, கண்ணுகுடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கும் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆம்பலாபட்டு வடக்கு கிராம மக்கள் கூறுகையில்:-
இந்தப் பாலம் இடிந்து விழுந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இதனை சீர் செய்து, பொது மக்கள் சென்று வரக்கூடிய வகையில் புதிய பாலம் கட்டித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சீரமைக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்புதிதாக பாலம் கட்டும் பணியை தொடங்காவிட்டால், இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக முடிவெடுத்துள்ளோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு இடிந்து விழுந்த பாலத்தை சீரமைத்து புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.