கடலூர் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்திற்குள் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் அறிவுரை


கடலூர் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்திற்குள் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்திற்குள் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

கடலூர்

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வார்டு வாரியாக நடைபெற்ற பணிகள் என்ன? நடைபெற்று வரும் பணிகள் என்ன? என்பது குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். அதற்கு, சில கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறாமல் கிடப்பில் உள்ள பணிகள் குறித்து பட்டியலிட்டனர். குறிப்பாக மழைக்காலம் ஆரம்ப உள்ளதால் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்காமல் கிடப்பில் உள்ளது குறித்தும், சாலை வசதி அமைக்காமல் இருப்பது குறித்தும் புகார் தெரிவித்தனர். இதை கேட்ட கலெக்டர், ஒப்பந்ததாரர்களிடம் மழைக்காலத்திற்குள் வடிகால் வாய்க்கால், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

தாமதம்

அதற்கு சில ஒப்பந்ததாரர்கள், பணிகள் செய்தும் அதற்கான தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர். அதற்கு அவர், இது பற்றி என்னிடம் தெரிவியுங்கள். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என்றார். முன்னதாக வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறாமல், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அலுவலர்களிடம், எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் செய்ய வேண்டும் என்றார்.

ஏற்கனவே மாநகராட்சிக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் கலெக்டர் மதுபாலன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரிடமும் புகார் குறித்து மனு அளித்தால், அதற்கான தீர்வு காண்பார் என்றார்.


Next Story