மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்


மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்
x

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிசு வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிசு வழங்கினார்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டது.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து குழந்தைகள் தின விழா உறுதிமொழியினை அனைவரும் எடுத்து கொண்டனர்.

கொலை மிரட்டல்

ஆம்பூர் தாலுகா, ஆஸ்டல் தெரு, ராமச்சந்திரபுரம், பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் (வயது 67) மற்றும் அவரது மனைவி கொடுத்துள்ள மனுவில் தனது மகன் முரளி, மருமகள் சந்தியா ஆகிய இருவரும் எனது மனைவி ராதாவுக்கு பாத்தியப்பட்ட வீட்டை எழுதிகொடுக்குமாறும், எங்களிடம் இருக்கும் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு எனது மனவியை மிரட்டி, அடித்தனர். தட்டிக் கேட்ட என்னையும் அடித்து மிரட்டினர்.

உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். எங்கள் புகார்மனுவை வாங்க மறுத்ததோடு, எங்களை மிரட்டி அனுப்பிவிட்டார்கள். அன்று முதல் எங்களை வீட்டை விட்டு வெளியில் துரத்திவிட்டார்கள். எனது மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

பரிசு வழங்கினார்

பின்னர் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா குழந்தைகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் சைல்டு லைன் பேண்டுகளை அணிந்துகொண்டு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அருண்பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேக் வெட்டி கொண்டாடினார்

அதைத்தொடர்ந்து மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது குழந்தை மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகள் தினத்தை கொண்டாடினார். இதில் சமூக நல அலுவலர் ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story