மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம் என கலெக்டர் அறிவித்துள்ளார்
வேலூர் மாவட்டத்தில் மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.
பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.
தடுப்பூசி
அனைவரும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா நோய்தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.