பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
திருப்புல்லாணி யூனியனில் ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கலெக்டர் ஆய்வு
திருப்புல்லாணி யூனியன் கொம்பூதி கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து குறைகளை கேட்டார். அப்போது கலெக்டர் பேசியதாவது:- அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும்.
மேலும், கிராம பகுதிகளில் பெரும்பாலும் பிளஸ்-2 உடன் படிப்பை சில மாணவர்களை பெற்றோர் நிறுத்தி விடுகிறார்கள். அந்த நிலையை மாற்றி பட்டமேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும். மாணவ, மாணவிகளும் ஆர்வமுடன் உயர்கல்வி வரை படிக்க வேண்டும்.
குறைகள் கேட்பு
அரசின் உதவியுடன், தொழில் பயிற்சியுடன் வேலை வாய்ப்புகளும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது. இது போன்ற வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
இதையடுத்து கொம்பூதி ஊராட்சியில் வீடு, வீடாக சென்று வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கிறதா?, ரேஷன் கடைகளில் சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா?, குடிநீர் வினியோகம் போன்றவற்றை பொதுமக்களிடம் நேரடியாக கலெக்டர் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.