வேலூரில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடி ஏற்றி 21 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடி ஏற்றி 21 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு காலை 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்க விட்டார்.
அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு ஏற்று கொண்டனர். இதையடுத்து கலெக்டர் வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 53 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து வருவாய்துறை, மாநகராட்சி உள்பட பல்வேறு அரசுதுறைகளை சேர்ந்த 274 பேருக்கு பாராட்டு சான்றிதழையும், பல்வேறு துறைகளின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 28 ஆயிரத்து 540 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.
பின்னர் சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் வகையில் பள்ளி மாணவ- மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அதில் வாள்வீச்சு, மான்கொம்பு, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர். மாணவர்களின் சாசக நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. முடிவில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் செய்த பள்ளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
கோட்டை கொத்தளம்
முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் கோட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
விழாவில், நந்தகுமார் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.