உலக சுகாதார கழிப்பறை திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் தொடங்கி வைத்தார்


உலக சுகாதார கழிப்பறை திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
வேலூர்

அடுக்கம்பாறை

அடுக்கம்பாறையில் உலக சுகாதார கழிப்பறை திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

உலக கழிப்பறை தினம்

உலக கழிப்பறை தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேரணிகள் நடைபெற்றன. அதன்படி வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, தாசில்தார் செந்தில், ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல் பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், துணை தலைவர் தென்போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கணேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலம், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று மூஞ்சூர்பட்டு கிராமத்தில் முடிவடைந்தது.

விழிப்புணர்வு பதாகையுடன்...

இதில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று எழுதப்பட்டிருந்த வாசக பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் அனைவரும் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுகொண்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சுந்தர்ராஜன், கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story