அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஆரணி அரசு மருத்துவமனையில் கலெக்டர் முருகேஷ் திடீரென ஆய்வு செய்தார்.
ஆரணி
ஆரணி அரசு மருத்துவமனையில் கலெக்டர் முருகேஷ் திடீரென ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ஆரணி அரசு மருத்துவமனையில் கலெக்டர் முருகேஷ் இன்று திடீரென ஆய்வு செய்தார்.
ஆரணியை அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஆனந்த் (வயது 57) என்பவர் நீண்ட காலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அவருக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் எலும்பு பிரிவு அறுவை சிகிச்சை டாக்டர் பால காமேஷ் தலைமையில் இடது கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரை கலெக்டர் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உயர்ரக சிகிச்சை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் செய்யாறு தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஆரணி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நல்ல முறையில் செய்யப்பட்டு இன்று அவர் நலமுடன் உள்ளார்.
இந்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் இதுபோன்று குறைபாடு சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் திறமை வாய்ந்த டாக்டர்கள் மூலம் இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து உயர்ரக சிகிச்சைகளும் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை அரசு மருத்துவமனையை நம்பி கிராம பகுதி பொதுமக்கள் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் அரசு மருத்துவமனைக்கு இணையாக தனியார் மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இது போன்ற சிகிச்சைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.
மகப்பேறு பிரிவு
மேலும் ஆரணி அரசு மருத்துவமனையை விரிவுபடுத்தும் வகையில் ரூ.6 கோடி மதிப்பில் சீமாஸ் பிரிவு என மகப்பேறு பிரிவு புதிதாக தொடங்கப்பட உள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் அடுத்த மாதம் அல்லது மே மாதத்துக்குள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட இணை இயக்குனர் பாபுஜி, மாவட்ட இணை இயக்குனர் (காசநோய்) அசோக், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மமதா, டாக்டர்கள் கவிமணி, பாலகாமேஷ், நந்தினி, ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, சவிதா, தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் நித்தியா உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.
முன்னதாக தச்சூர் கிராமத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.