கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை தாலுகா, கருங்கல்பட்டி குடிதெருவை சேர்ந்தவர் சாந்தி. இவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது மனு அளிக்க வரிசையில் பின்னால் நின்று கொண்டிருந்த சாந்தி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட அதிகாரிகள், போலீசார் பாட்டிலை பிடிங்கி அவரை தடுத்தனர். இதனை கண்ட கலெக்டர் இதுபோன்று செய்யக்கூடாது என அறிவுரைகூறி அவரிடம் மனுவை பெற்று கொண்டார்.
அப்போது அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் வீட்டு மனையில் நடைப்பாதை இல்லை என சிலர் பிரச்சினை செய்கிறார்கள். இவர்கள் எங்கள் வீட்டிற்கு நடைப்பாதை இல்லை என்று நடக்கக்கூடாது என்று சொல்லி அடைத்து விட்டார்கள். ஆகவே வாழ்வாதாரம் பாதிப்பு, என்னுடைய குழந்தை பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து போலீஸ் நிலையத்திலும், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். சுமார் 4 ஆண்டுகளாக நடைபாதை இல்லை. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினை சரி செய்து கொடுக்கப்படவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை. ஆகவே எனது வீட்டிற்கு நடைபாதை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.