பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மனுக்கள் பெற்ற கலெக்டர்
புதூர்நாடு மலை கிராமத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மனுக்கள் பெற்றார்.
குறை தீர்வு கூட்டம்
மக்களை தேடி மாவட்ட கலெக்டர் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் அருகே உள்ள புதூர்நாடு மலை கிராமத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மக்கள்குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழங்குடியினர் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, கழிப்பிட வசதி, வங்கி கடன் என 730 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டார்.
வீடுகளுக்கே சென்று
மேலும் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று குடிநீர் வசதி, சாலை வசதி, சாதி சான்றிதழ், மாடு, ஆடு கடன் வேண்டி மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 114 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது கலெக்டர் கூறுகையில் 10 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பல்வேறு தேவைகள் குறித்து 7,656 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சாதி சான்றிதழ்கள் தேவை என்று 2739 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தங்களுக்கு தேவையான தேவைகளை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யுங்கள். இதைத் தவிரத்து என்னென்ன தேவைகள் இருக்கின்றது என்பதை எழுத்துப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவரிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ கொடுங்கள்.
சாலை வசதி
கொடுமாம்பள்ளி முதல் சோக்கானூர் வரை 5 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாலைப்பணி விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முகாமில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்தையன், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்யடின், தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.