விறகுகளை தலையில் சுமந்து கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன
சேலம்:-
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தலையில் விறகுகளை சுமந்து கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர வடக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மெய்யனூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சண்முகராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் சேதுமாதவன், மாநகரக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், குருபிரசன்னா, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
விறகுகளை சுமந்து
அப்போது, கியாஸ் சிலிண்டர் விலையை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலையில் விறகுகளை சுமந்து வந்து நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டு இருந்தன.
ஆர்ப்பாட்டத்தின்போது உயர்த்தப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் அலுவலகங்கள், வீடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.