டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்


டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் டாஸ்மாக் கடையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். தொடர் போராட்டம் தொடர்பாக அறிவிப்பும் வெளியிட்டனர்.

தேனி

டாஸ்மாக் கடை திறப்பு

தேனி அல்லிநகரத்தில் கூட்டுறவு சங்கம் எதிரே பெரியகுளம் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டது. பல்வேறு அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக இந்த டாஸ்மாக் கடை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் அந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த கடையை மூடக்கோரி பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்காக கடை முன்பு கட்சியினர் நேற்று திரண்டனர். இதனால், அந்த கடை திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் தற்காலிகமாக மூடுவதற்கு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் அந்த கடை பூட்டப்பட்டது.

முற்றுகை

இதையடுத்து அந்த கடையை முற்றுகையிட்டு அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்களின் நலன் கருதியும், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் இந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேனி தாலுகாகுழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், வெண்மணி, நாகராஜ், முனீஸ்வரன், தாலுகா செயலாளர் தர்மர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் டாஸ்மாக் அலுவலக தாசில்தார் பாலசண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். 3 மாத கால அவகாசத்தில் கடையை இடமாற்றம் செய்வதாக அவர் தெரிவித்தார். அப்போது அதை எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டனர். ஆனால், எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர் போராட்டம்

பின்னர் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் பிற்பகல் 3 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டமும், 30-ந்தேதி சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story