சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட சாய்நாதபுரத்தில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள சமுதாய கூடம் சேதமடைந்து குப்பை, கூளமாக காட்சியளித்தது. அதனை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். பின்னர் அங்குள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை தரமாக உள்ளதா என்று எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவில் கல்வெட்டு சேதமடைந்து காணப்பட்டது. அதனை புதுப்பித்து தரும்படி அக்கோவில் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதனை பார்வையிட்ட ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கல்வெட்டை சரி செய்து தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை பார்வையிட்டார். அதன் அருகில் காணப்பட்ட 2 மரங்களின் கிளைகள் மின்வயர்கள் மீது உரசியபடி காணப்பட்டது. அவற்றை வெட்டி அப்புறப்படுத்தும்படியும், புண்ணியகோட்டி தெருவில் பாதியில் கைவிடப்பட்ட சாலையை விரைந்து அமைக்கும்படியும், மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி என்ஜினீயர் ரவிச்சந்திரன், உதவி என்ஜினீயர் செல்வராஜ், கவுன்சிலர் ஜெய்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.