மூங்கில்குடி கிராமத்தில் மதகு கட்டும் பணி தொடங்கியது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, நன்னிலம் அருகே மூங்கில்குடி கிராமத்தில் மதகு கட்டும் பணி தொடங்கியது.
நன்னிலம்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, நன்னிலம் அருகே மூங்கில்குடி கிராமத்தில் மதகு கட்டும் பணி தொடங்கியது.
தலைப்பு வாய்க்கால்
நன்னிலம் அருகே உள்ள மூங்கில் குடி, காக்கா கோட்டூர், சுரக்குடி ஆகிய கிராமங்களுக்கு நீர் பாசனம் தரக்கூடிய தலைப்பு வாய்க்கால் உள்ளது. பாட்டில் இருந்து வரும் நீரை இந்த தலைப்பு வாய்க்காலின் அருகில் உள்ள நீர் தேக்கி மற்றும் வடிகாலாக பயன்படக்கூடிய வாய்க்கால் மதகில் தேக்கினால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாசனம் பெற முடியும்.
அதேபோன்று மழை காலங்களில் அந்த மதகை திறந்து விட்டால் மழை நீர் வடிந்துவிடும். இந்த பிரதான மதகு மிகவும் பழுதடைந்து இருந்ததால் விவசாயிகள் புதிய மதகு கட்டப்பட வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
புதிய மதகுகள்
அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த மதகு பொதுப்பணித்துறை சார்பில் இடிக்கப்பட்டு புதிய மதகுகள் கட்டுவதற்கு பள்ளம் மட்டுமே தோண்டப்பட்டது. அதன் பிறகு எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் இருந்தது. அதேபோன்று அதிலிருந்து பாசனம் தரக்கூடிய புளியஞ்சி வாய்க்காலுக்கு உரிய பிரதான மதகும் இடிக்கப்பட்ட நிலையிலே கிடக்கிறது. இன்னும் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுமான பணிகள்
இதுகுறித்த செய்தி கடந்த வாரம் தினத்தந்து நாளிதழில் வெளிவந்தது. அதைனை தொடர்ந்து மேற்கண்ட இடத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் அதிகாரிகளுக்கும், இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.