திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணி தீவிரம்
திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
விராலிமலை:
விராலிமலை தாலுகா கொடும்பாளூர் அருகே அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் 10 ஏக்கர் பரப்பளவில் திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில், வேறெங்கும் இல்லாத வகையில் 12 திருமுறைகளில் உள்ள 18 ஆயிரம் பாடல்களை செப்பேடுகளில் இடம் பெறச் செய்து கருவறையில் சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. உலகத்திலேயே இதுபோன்ற கோவில் வேறெங்கும் இல்லாத வகையில் அமைய உள்ளது. இதனை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், விராலிமலையில் திருமுறை தாமிரசபையும், இசைவேளாளர் அறக்கட்டளையும் இணைந்து சேக்கிழார் சுவாமிகள் அருளிய திருத்தொண்டர் மார்க்கதை (பெரியபுராணம்) திருவிழா என்ற பெயரில் திருமுறை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி வருகிற 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டையில் திலகவதியார் திருவருள் ஆதீனத்தலைவர் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், திருமுறை செப்பேட்டு கோவில் 5 டன் எடையில் அமைக்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் அறுபத்து மூவர் சித்திர கூடம், அருங்காட்சியகம், நூலகம், தியானமண்டபம் ஆகியன அமைக்கப்பட உள்ளது மற்றும் கோவிலின் சிறப்பையும் எடுத்து கூறினார்.