ஒரே நாளில் 43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

வேலூர் மாவட்டத்தில் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரேநாளில் 43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரேநாளில் 43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

1,965 இடங்களில் சிறப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் ஒரேநாளில் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிறப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார், உழவர்சந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்பட 1,965 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் கஸ்பா மாசிலாமணி அரசுப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பள்ளிகளை சுத்தமாக...

பின்னர் அவர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 98 சதவீதமும் போடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவர்களுக்கு ஒரு வாரகாலம் தடுப்பூசிகளை போட அந்தந்த பள்ளிகளில் ஏற்பாடு செய்துள்ளோம். திட்டமிட்டபடி பள்ளிகளை திறப்பதால் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன் என்று கூறினார்.

மேலும் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த 2 கட்டிடங்களை இடிக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இதில், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி அதிகம் நபர்கள் போட்டு கொண்டனர். தடுப்பூசி போடும் பணியில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று 700-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story