தலை நசுங்கிய நிலையில் பச்சிளம் குழந்தை பிணம்
பரங்கிப்பேட்டை அருகே தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே தச்சகாடு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டின் பின்புற தோட்டத்தில் நேற்று காலை பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் இறந்த குழந்தையின் தாய் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்து உடலை வீசி விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டு தோட்டத்தில் பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்த சம்பவத்தால் தச்சகாடு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.