தீக்குளிக்க போவதாக கவுன்சிலர் ஆவேச பேச்சு
குழித்துறை-மடிச்சல் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ந் தேதி தீக்குளிக்கப்போவதாக கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
குழித்துறை-மடிச்சல் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ந் தேதி தீக்குளிக்கப்போவதாக கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
குழித்துறை நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது.
நகராட்சி ஆணையாளர் ராம திலகம் மேற்பார்வையாளர் கீதா, துணைத் தலைவர் பிரபின் ராஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் நகராட்சியில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவதது:-
தீக்குளிப்பு
கவுன்சிலர் ரவி: குழித்துறை-மடிச்சல் செல்லும் சாலை நாம் பொறுப்பேற்கும் முன்பே படுமோசமாக உள்ளது. அந்த சாலையில் தார் போட்டு சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அதிகாரிகள் அந்த சாலையை பார்வையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மினி குமாரி: இந்த சாலை மிக மோசமாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி: இந்த சாலை குறித்து தொடர்ந்து பல கூட்டங்களில் பேசியுள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகிற 30-ந்தேதிக்குள் இதற்கான பணியை தொடங்க வேண்டும். இல்லை என்றால் 31-ந் தேதி குழித்துறை ஜங்ஷனில் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்.
(இவ்வாறு அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.)
நடவடிக்கை
தலைவர்: இந்த சாலை பணியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர்: அரசின் திட்ட நிதியில் இந்த சாலையை சீரமைக்க முயற்சி செய்தோம். ஆனால் நடைபெறவில்லை.ஆகவே நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.24 லட்சத்தில் இந்த சாலையை சீரமைக்க நெல்லை மண்டல அதிகாரி அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி பெற்று பணிகள் உடனே தொடங்கப்படும்.
சர்தார் ஷா: குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பணிகள் நகராட்சி பகுதிகளில் முறையாக நடைபெறவில்லை. வருகிற 30-ந் தேதிக்குள் பணியை முடித்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளது.
ஆட்லின் கெனில்: குடிநீர் வடிகால் வாரிய பணிகள் நடக்க வேண்டுமென்றால் போராட்டமே இறுதியானது.
தலைவர்: அடுத்த வாரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வருகிறார்கள். அதில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும்
மேற்கண்டவாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.