கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

சாதாரண கூட்டம்

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டல சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டலக் குழு தலைவர் யூசுப்கான் தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் பிரபுகுமார்ஜோசப் வரவேற்றார். கூட்டத்தில் உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், மாரியப்பன் மற்றும் கவுன்சிலர் திருப்பாவை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 15 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் 47-வது வார்டு கவுன்சிலர் எழிலரசன் பேசியதாவது:-

எங்கள் வார்டு பகுதியில் கொசு மருந்து அடிக்கப்படவில்லை. இதேபோல மாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஏன் மருந்து அடிக்க என்று கேட்டால் டீசல் பற்றாக்குறை உள்ளதாக கூறுகின்றனர். மேலும் கால்வாயை தூர்வாருவதற்கென்று பொக்லைன் எந்திரம் வாங்கப்பட்டது. ஆனால் அந்த எந்திரம் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய துணைமேயர் சுனில்குமார் பொக்லைன் எந்திரம் இயக்குவதற்கு விரைவில் டிரைவர் நியமிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்றார்.

வாக்குவாதம்

இதனிடையே கவுன்சிலர் எழிலரசன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென குறுக்கிட்ட 51-வது வார்டு கவுன்சிலர் ஜெய்சங்கர் கூட்டத்தை முடிக்குமாறு மண்டல குழு தலைவரிடம் தெரிவித்தார். இதற்கு எழிலரசன் கூட்டத்தை முடிப்பதற்கு மண்டல குழு தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூறி மண்டலகுழு தலைவர் செயல்படக்கூடாது. பொது பிரச்சினை குறித்து இங்கு பேச வந்துள்ளோம் என்றார்.

அதற்கு ஜெய்சங்கர், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் பேச வேண்டாம். தங்களது கோரிக்கையை தனியாக மண்டல குழு தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். பின்னர் மண்டலகுழு தலைவர் கோரிக்கைகளை தெரிவியுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கவுன்சிலர்களின் வாக்குவாதத்தால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story