வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றமும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும்- ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேச்சு
வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றமும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசினார்.
ஊட்டி
வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றமும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசினார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
ஊட்டி பிங்கர்போஸ்ட் அடுத்த காக்காதோப்பு பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.37¾ கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், விரைவு மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்கள் இயங்க உள்ளன. இந்த ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கோர்ட்டு கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதித்துறை
சாமானிய மனிதனின் நீதிக்கான கடைசி நம்பிக்கை நீதித்துறையாகும். தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படுவதற்கு சமம். ஆனால் நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லாத நிலையில், வழக்கு எப்போது முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக நீதிபதிகளின் வேலை பளு அதிகரிக்கிறது. இதனால், வழக்கு விசாரணை தாமதமாகிறது. எனவே, தேவையான நீதிபதிகள் மற்றும் போதுமான கட்டமைப்புகள் மிகவும் முக்கியமாகும்.
தமிழகத்தில் உள்கட்டமைப்புகளை மாநில அரசு சிறப்பாக ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்குகின்றன. சென்னையின் மையப்பகுதியில் நீதிமன்ற வளாகம் அமைக்க நிலம் ஒதுக்கி உள்ளது. 116 நீதிமன்றங்கள் கொண்ட சிவில் நீதிமன்றம் இந்த பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு அரசு துரிதமாக செயல்பட்டு நிலத்தை ஒதுக்கி உள்ளது.
92 சிவில் வழக்குகள் நிலுவை
நீலகிரி மாவட்டத்தில் 92 சிவில் வழக்குகள் மற்றும் 33 கிரிமினல் வழக்குகள் 20 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. இதேபோல 3 வழக்குகள் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த தாமதத்தை நியாயப்படுத்த கூடாது. நிலுவை வழக்குகளின் விசாரணைகளை விரைவாக முடிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் எந்த வழக்கும் இல்லை என்ற நிலையை எட்ட வேண்டும். இதற்கு வக்கீல்கள் ஒத்துழைக்க வேண்டும்.
நீதிமன்றம் மற்றும் வக்கீல் கள் இணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தலாம். இளம் வக்கீல்கள் தங்கள் பணி முடிந்த பின்னர் வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்று விடுகின்றனர். அப்படி அல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுவது, அதற்கு நீதிபதிகளின் எதிர்வினை, வழக்கில் நீதிபதிகளின் மனநிலை ஆகியவற்றை கூர்ந்து கவனித்தால், எதிர்காலத்தில் தங்களது வழக்கு விசாரணைக்கு அவை பெரும் உதவியாக இருக்கும்.
நீலகிரியின் இயற்கை காலநிலை
மேலும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்திய தண்டனை சட்டத்தை லார்டு மெக்கலே வரையறுத்துள்ளார். இதனால், நீலகிரி மாவட்டம் சட்டத்தை வரையறுப்பதிலும் பங்கு வகித்துள்ளது. மெக்கலே மூன்று மாதங்கள் இங்கேயே தங்கி இப்பணிகளை செய்துள்ளார். இதற்கு நீலகிரியின் இயற்கை மற்றும் காலநிலையும் மற்றொரு காரணமாகும்.
நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை பெரும் பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், சேஷசாயி, ஆனந்தி, பவானி சுப்பராயன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட நீதிபதி முருகன், மகிளா கோர்ட்டு நீதிபதி நாராயணன், மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நீலகிரி பார் அசோசியேஷன் தலைவர் சந்திரபோஸ், துணைத்தலைவர் பாலநந்தகுமார், அரசு வக்கீல்கள் ஆனந்த், செந்தில் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.