யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை - ஐகோர்ட்டு


யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை - ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 3 Jun 2023 1:57 AM IST (Updated: 3 Jun 2023 12:11 PM IST)
t-max-icont-min-icon

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட்டு நேற்று பிறப்பித்தது. அதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனைைய உறுதி செய்தது.

மதுரை

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட்டு நேற்று பிறப்பித்தது. அதில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனைைய உறுதி செய்தது. சாதிய கட்டப்பஞ்சாயத்துகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர், கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா்.

காதல் விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.. பின்னர் இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் மரணம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்

முதலில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் ேசர்க்கப்பட்டு இருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சாகும் வரை சிறை

அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அதாவது, இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள்தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஓரிரு நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளியான யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

கோகுல்ராஜ் இறந்தது தொடர்பான வழக்கில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பதிவுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தும், நாங்கள் தலைமறைவாக இருந்ததாலும் எங்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கீழ்க்கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

ஆனால் இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களும்தான். இவர்கள் அனுமானத்தின் அடிப்படையில் சாட்சியம் அளித்துள்ளனர். அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

நாங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, எங்களுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறியிருந்தனர்.

சுவாதியிடம் நேரில் விசாரணை

இந்த மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்தது. இந்த 10 பேருக்கு விதித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் மற்ற 5 பேர் விடுதலைைய மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி. ேபாலீஸ் தரப்பில் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவையும் மேல்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் கோகுல்ராஜ் கொலைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோகுல்ராஜ் தன்னுடைய வகுப்பு தோழர் மட்டும்தான். வேறு எந்த தொடர்பும் இல்லை என்று வாக்குமூலம் அளித்தார். அப்போது சில வீடியோ மற்றும் ஆடியோக்களும் அவருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அவற்றில் வரும் நபர் குறித்து சுவாதி, முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக கூறி, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீர்ப்பு

மதுரை ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சுவாதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.

இதற்கிடையே தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீட்டு மனுக்களை முழுமையாக விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிற்பகல் 2.15 மணி அளவில் பிறப்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இருந்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கோகுல்ராஜ், சுவாதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கோகுல்ராஜ் மாயமான நிலையில், தலை துண்டிக்கப்பட்டு அவரது உடல் ரெயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்ற குற்றச்சங்கிலி தொடரை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து உள்ளனர். இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன.

சாதியே காரணம்

இத்தனைக்கும், கோகுல்ராஜூவுக்கும், இவர்களுக்கும் முன்விரோதமோ, பகையோ இல்லை. கொலைக்கான ஒரே காரணம் சாதிதான்.

எனவே, இவர்களுக்கு மதுரை சிறப்பு கோர்ட்டு தண்டனை வழங்கி அளித்துள்ள தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. அதனால், யுவராஜ், அருண் உள்பட 8 பேருக்கு கீழ்க்கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். இவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் சலுகையை அரசு வழங்கக்கூடாது.

அதேநேரம், யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக பிரபு, கிரிதர் ஆகியோருக்கு விதித்த ஆயுள்தண்டனையை ரத்து செய்கிறோம். அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மட்டும் வழங்குகிறோம்.

இந்த கொலை வழக்கில் 5 பேரை கீழ் கோர்ட்டு விடுதலை செய்தது. அவர்களது விடுதலையையும் உறுதி செய்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீட்டு மனுக்களையும், கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கையும் தள்ளுபடி செய்கிறோம்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட யுவராஜ், தலைமறைவாக இருந்து கொண்டு ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். இதுபோன்ற செயல்களை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோகுல்ராஜ் கொலை என்பது சாதி என்ற பேய் ஏற்படுத்திய தாக்கத்தில் நடந்த நிகழ்வு.

இரும்புக்கரம்

சுப்ரீம்கோர்ட்டு தனது தீர்ப்புகளில் சாதிய கட்டப்பஞ்சாயத்துகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதையும் நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சாட்சிய பதிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கவனத்தில் கொண்டு, இந்திய சாட்சிய சட்டத்தில் மின்னணு சான்றுகள் பற்றிய தனி அத்தியாயம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

சுவாதி மீதான வழக்கு

அதே நேரத்தில் சுவாதி மீதான அவமதிப்பு வழக்கில் தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது.


Related Tags :
Next Story