நாயின் வாய்க்கு பூட்டு ேபாட்ட கொடூரம்..!
தட்டார்மட்டத்தில் நாயின் வாய்க்கு பூட்டு ேபாட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் தெருநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த நாயின் வாயில் சங்கிலியால் இழுத்து கட்டப்பட்டு, பூட்டு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த நாய் உணவு அருந்த முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்தது. அதை அகற்ற முடியாமல் அங்கும், இங்கும் அலைந்து திரிந்த நாயின் பரிதாப நிலையை பார்த்த சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ஹாரிஸ் தாமஸ் மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த நாயை கண்டுபிடித்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி அதன் வாயில் போடப்பட்டு இருந்த சங்கிலியை அறுத்து பூட்டை அகற்றி விடுவித்தனர். பின்னர் நாய்க்கு உணவு அளிக்கப்பட்டது. அதை தின்ற நாய், பின்னர் அங்கிருந்து சந்தோஷமாக ஓட்டம் பிடித்தது.
நாயின் வாயில் போடப்பட்டு இருந்த பூட்டை அகற்றி அதற்கு உதவிய தீயணைப்பு படையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் நாயை சித்ரவதை செய்த நபரை கண்டுபிடித்து அவரை மிருகவதை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.