தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை அவசியம்

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் நாகர்கோவிலில் பலத்த மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த மழைநீர் ஆராட்டு ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதை தடுக்க நடவடிக்கை அவசியம் ஆகும்.

-ஆர்.நாகராஜன், நாகர்கோவில்.

சாலை சீரமைக்கப்படுமா?

நுள்ளிவிளை கார்மல் மாதா கோவிலில் இருந்து வடக்கு நுள்ளிவிளை வரை தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை மூடப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. தற்போது பெய்த மழையால் மேலும் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோசெபின், நுள்ளிவிளை.

விபத்து அபாயம்

நாகர்கோவில் ஸ்காட் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள டிராவல் தெருவில் சாலையின் நடுவில் அபாயகரமான பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-பி.எஸ்.ராஜா, வெட்டூர்ணிமடம்.

துர்நாற்றம் வீசுகிறது

மிடாலம் ஊராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் கண்ணவிளை பஸ் நிறுத்தம் அருகே சில மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் ஓடையை தூர்வாரினார்கள். ஆனால் அங்குள்ள நிழற்குடை அருகே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அது தற்போது துர்நாற்றம் வீசுவதால், அந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும் கொசுக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணமோகன், மிடாலம்.

படித்துறை கட்டவேண்டும்

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி கால்நடை ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள பழையாற்றில் பொதுமக்கள் குளிப்பதற்காக கட்டப்பட்ட படித்துறை சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. பூதப்பாண்டி மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் இருந்து வரும் மக்கள் திருவிழா, கொடை விழாவுக்கு தண்ணீர் எடுப்பார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி படித்துறையை மீண்டும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

சேதமடைந்த மின்கம்பம்

அஞ்சுகிராமம் பேரூராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சிதம்பரநாதன் நகரில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக நடந்து செல்பவர்கள் ஒரு வித அச்சத்துடனேயே செல்கிறார்கள். எனவே மின் கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம்.

-முத்து குமார், அஞ்சுகிராமம்.

மாற்று ஏற்பாடு அவசியம்

திங்கள்நகரில் இருந்து இரணியல் வழியாக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் மடவிளாகம் பகுதியில் பொதுமக்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி சிறு பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் நோயாளிகள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், ஆடராவிளை.


Next Story