பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கணஞ்சாம்பட்டியில் கடந்த 19-ந் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சங்கர், முனீசுவரி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 25 போ் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 55), சாத்தூர் அமீர் பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (25) ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. வெடி விபத்தின் போது பலியான சங்கரின் மகன்தான் கருப்பசாமி ஆவார்.
உடல் ஒப்படைப்பு
சிகிச்சை பலனின்றி இறந்த மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரு.5 லட்சத்துக்கான காசோலையையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமாகவும் வழங்கினார்.
இதற்கிடையே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் உற்பத்திக்கு தடை விதித்து பிறப்பித்த ஆணையானது, தொழிலக பாதுகாப்பு சுகாதார துணை இயக்குனர் சுதாகர் முன்னிலையில் அந்த ஆலையில் ஒட்டப்பட்டது.