வடலூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 22 வீடுகள் இடித்து அகற்றம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
வடலூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.
வடலூர்
வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி உள்ளது. இந்த ஏரி கரையை ஆக்கிரமித்து தனிநபர்கள் சிலர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த நிலையில் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதில் ஏாியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 22 வீடுகளில் வசிப்பவர்களும் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நீர்வளத்துறை சார்பில் அகற்றப்படும் என கூறப்பட்டிருந்தது.
22 வீடுகள் அகற்றம்
இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள், நேற்று வரை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால் நீர்வளத்துறை வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அருணகிரி அறிவுறுத்தலின் பேரில் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் முன்னிலையில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சக்தி செல்வன் மற்றும் அதிகாரிகள் 22 வீடுகளையும் இடித்து அகற்ற பொக்லைன் எந்திரங்களுடன் மருவாய் கிராமத்திற்கு சென்றனர்.
இதை பார்த்த ஆக்கிரமிப்பாளர்கள், உடனடியாக தங்களது வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றனர். பின்னர் 22 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. அப்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.