பாப்கார்ன் ரூ.40 முதல் 120 வரை,டீ, காபி ரூ.30-க்கு விற்பனை'தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது'


பாப்கார்ன் ரூ.40 முதல் 120 வரை,டீ, காபி ரூ.30-க்கு விற்பனைதியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாப்கார்ன் ரூ.40 முதல் 120 வரையும், டீ, காபி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதால் ‘தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது' என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி


சினிமா தியேட்டர்கள் ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆணும், பெண்ணும் குழந்தையும் குட்டியுமாக கிளம்பி திருவிழாவிற்குப் போவது போல் தியேட்டர்களுக்கு போவார்கள். இப்போது அந்த ஆர்வமும், ஆசையும் இருந்தாலும்கூட அந்த மக்களால் சினிமா தியேட்டர்களுக்கு போகமுடியுமா என்று கேட்டால், முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது.

மயக்கம் தரும் விலை

அந்த அளவில் தியேட்டர்கள் சாதாரண, சாமன்ய மக்களின் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இல்லை. டிக்கெட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலைகளைக் கேட்டால் மயக்கம் போட்டுதான் விழ வேண்டும்.

சென்னையில் 10 ரூபாய், 20 ரூபாய்க்குக்கூட தகுதி இல்லாத வெறும் மக்காச் சோளப் பொரிக்கு (பாப்கார்ன்) 250 ரூபாய்! காபி, டீயா? 70 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கார்ன் ரூ.400 வரை விற்கிறார்கள்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் மக்காச் சோளப் பொரி (பாப்கார்ன்) ரூ.40 முதல் ரூ.120 வரையும், காபி, டீ 30 ரூபாய்! இது சாதாரண தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் டிக்கெட் கட்டணத்தைவிட தின்பண்டங்கள் விலைகளே திகைக்க வைக்கின்றன.

இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.

என்ன நியாயம்?

இதுபற்றி விசாரித்தால், ''தியேட்டர் பராமரிப்புச் செலவு அதிகமாகிறது. டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயிப்பதால் அதை உயர்த்த முடியவில்லை. தின்பண்டங்களின் விலைகளை அதிகமாக வைத்திருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி தின்பண்டங்கள் வாங்கச் சொல்வது இல்லை'' என்கிறார்கள்.

நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களைப் பிடுங்கிவைத்துக் கொண்டு இவ்வாறு சொல்வது என்ன நியாயமோ? தெரியவில்லை.

சினிமா தொழிலுக்கு மூலதனமே அதைப் பார்க்கவரும் ரசிகர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் ஆதங்கங்கள், கருத்துகள் வருமாறு:-

தியேட்டருக்கு செல்லும் ஆசை இல்லை

கல்லூரி மாணவி மோகன பிரியா கூறும் போது, 'தியேட்டர்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்களுக்கு கொடுக்கும் கட்டணத்தில் 5 சினிமா பார்த்துவிட முடியும். இதனால் திரைப்படம் பார்க்க செல்வதற்கு முன்பாக 4 மணி நேரத்திற்கு பசிக்காத அளவிற்கு வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு சென்று விடுவேன். ஒரு சிலர் தியேட்டருக்கு அருகில் உள்ள உணவு விடுதிகளில் பரோட்டா சாப்பிட்டு விட்டு தியேட்டர்களுக்கு செல்கின்றனர். தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விலை தியேட்டர்களில் அதிகம் என்பதால் அங்கு படம் மட்டுமே பார்ப்போம். இடைவேளையில் எதுவும் வாங்க மாட்டோம். எங்களைப் போன்று பலரும் மாறி வருகின்றனர். விலைகளை குறைத்தால் தின்பண்டங்களை வாங்கி அனைவரும் சாப்பிடுவார்கள். வெளியில் இருந்து தின்பண்டங்கள் கொண்டு வரவும் அனுமதிப்பது இல்லை. இவ்வாறு செய்வதால் தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையே போய் விடுகிறது' என்றார்.

கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்

விழுப்புரத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரி:-

தியேட்டர்களில் தின்பண்டங்கள் கொள்ளை விலையில் விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக பப்ஸ், பாப்கார்ன், டீ, காபி, குளிர்பான வகைகள், வெளியில் உள்ள கடைகளை காட்டிலும் இருமடங்கு விலைக்கு விற்பனை செய்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு தேவையான குடிநீர், பால் பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது,. இது எந்த விதத்தில் நியாயம்? சினிமா டிக்கெட் விலையை விட 2, 3 மடங்கு அதிக விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் சத்துக்கள் இல்லாதவையாகவே உள்ளது. இவ்வாறு தியேட்டர்களில் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது அதிகாரிகளுக்கு தெரிந்தும் அவர்களும் கண்டும், காணாமல் இருப்பது ஏனோ என்று தெரியவில்லை. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

அனுமதிக்க வேண்டும்

வளத்தியை சேர்ந்த ஞானசவுந்தரி:-

குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுப்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் சத்தான, உடலுக்கு தீங்கு விளைவிக்காத தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது. வெளியில் உள்ள கடைகளில் சரியான விலையில் விற்கப்படும் தின்பண்டங்கள் சினிமா தியேட்டர்களில் பலமடங்கு விலையில் விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உதாரணத்திற்கு வெளியில் மக்காச்சோள பொரி பாக்கெட் ரூ.20-க்கு விற்கப்படுகிறது என்றால் தியேட்டர்களில் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு டீயின் விலை வெளியில் ரூ.10 அல்லது 12 எனில் தியேட்டர்களில் ரூ.20-க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உணவுப்பண்டங்கள் அனைத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய குழந்தைகள் அதைத்தான் விரும்புகின்றனர். பெற்றோர்களாகிய நாம்தான் குழந்தைகள் எதை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படாது என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தேவைகள் அதிகரிக்கும்போது அதன் விலை உயரத்தான் செய்யும். ஆகையால் அதன் தீங்குபற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழிப்புணர்வு அடைந்தால் விலையேற்றமும் இருக்காது. அதன் தேவைகளும் குறையும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வெளியிலும், தியேட்டர்களிலும் தின்பண்டங்கள் தரமானதாக இருக்கிறதா? சரியான விலைக்கு விற்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதேநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான தின்பண்டங்களை வீட்டிலேயே செய்து கொண்டு தியேட்டர்களுக்கு எடுத்துச்சென்று சாப்பிட அதன் உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும்.

ஜீரணக்கோளாறு

திண்டிவனம் சண்முகம்:-

சினிமா தியேட்டர்களில் தரமற்ற உணவுகள் அதிக விலையில் விற்கப்படுகிறது. ரசிகர்களின் கூட்டத்திற்கு ஏற்ப இரு மடங்குக்காகவும் மும்மடங்காகவும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு விற்கப்படும் சமோசா மற்றும் சில தின்பண்டங்கள் பாதி வேக வைத்த நிலையில் விற்கப்படுவதால் குழந்தைகளுக்கு ஜீரணக்கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும் வீட்டில் இருந்து கொண்டுவரும் உணவுப்பொருட்களுக்கும் அனுமதி மறுக்கிறார்கள். குடிநீர், தேநீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பாப்கார்ன் போன்ற உணவு வகைகள் பேமிலி பேக் என அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இரு மடங்கு உயர்வு

செஞ்சி கார்மேகம்:-

சினிமா தியேட்டர்களில் தின்பண்டங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சென்னையில் அது நடைமுறைக்கு சாத்தியமாக இருக்கும். சிறிய கிராமம், பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் சென்னையில் இருக்கக்கூடிய தியேட்டர்களை போன்று தின்பண்டங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு தண்ணீர் பாட்டில் வெளியே 10 ரூபாய் என்றால் சினிமா தியேட்டர்களில் இருமடங்காக 20 ரூபாய் என்று விற்பனை செய்கிறார்கள். இதுபோன்று குடிநீர் பாட்டில்கள் மட்டுமின்றி அங்குள்ள திண்பண்டங்கள் அனைத்தையும் எம்.ஆர்.பி. விலையை விட இருமடங்கு அதிகமாக விற்பனை செய்கிறார்கள். ஆகவே உடனடியாக அரசு அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமான தின் பண்டங்களை விற்க வேண்டும்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த வி.சரவணன்:-

கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் கடைகளில் விற்பதை விட பல மடங்கு விலை அதிகம் வைத்து தின்பண்டங்களை விற்பனை செய்கிறார்கள். கள்ளக்குறிச்சியை பொருத்தவரை குறிப்பாக ஒரு தியேட்டரில் மட்டும் பாப்கான், சுவிட்கான், சான்வெட்ச், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல வகையான திண்பண்டங்கள் தரமானதாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சில தியேட்டர்களில் தரமில்லாத தின்பண்டகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் தரமில்லா தின் பண்டங்களை சாப்பிடுவதால் வயிறு உபாதை ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே தியேட்டர்களில் தரமான விற்பனை செய்யவும், குறைந்த விலையில் தின் பண்டங்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றார்.

தின்பண்டங்கள் விலையை குறைக்கவேண்டும்

தியாகதுருகம் ஷாநவாஸ்:-

முன்பு கள்ளக்குறிச்சி தியேட்டருக்கு படம் பார்க்க சென்றால் ரூ.50 இருந்தால் போதும். ஆனால் இப்போது சினிமா டிக்கெட் கட்டணத்தை விட தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 10 ரூபாய் பாப்கார்னை ரூ.40 வரைக்கும், ஐஸ்கிரீம் ரூ.50 வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. குழந்தைகளை அழைத்துச் சென்றால் தியேட்டர்களில் தின்பண்டங்கள் வாங்கி கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு சில தியேட்டர்களில் தரமில்லாத தின் பண்டகங்கள் விற்கப்படுவதால், அதனை சாப்பிடும் நபர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே தியேட்டர்களில் தின்பண்டங்களின் விலையை குறைப்பதோடு, தரமான தின்பண்டங்களை விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களும் படம் பார்க்க வருவார்கள் என்றார்.

நிர்ப்பந்தம் செய்வது இல்லை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கூறும் போது, 'தியேட்டர்களுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ற வருவாயை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இடைவேளையில் விற்கப்படும் பாப்கானை பொறுத்த வரையில் சென்னையில் ரூ.400, ரூ.200, ரூ.150 என்ற விலையிலும், டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் ரூ.10, ரூ.70 மற்றும் ரூ.146 என்ற நிலையிலும் இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம். சென்னையைவிட்டு பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.30 அதிகபட்சமாக ரூ.40 கட்டணத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கார்ன் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாகத்தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர். திரையரங்குகளில் பாப்கார்ன் மட்டும் அப்படி விற்பதில்லை, ரெயில் டிக்கெட் கவுண்ட்டரில் ஒரு கட்டணம், சாதாரணமாக ஆன்-லைனில் வாங்கினால் ஒரு கட்டணம், தட்கல் மற்றும் பிரிமியம் தட்கல் என்ற வகையில் கட்டணங்கள் மாறுபடுகிறது. செலவினங்களுக்கு ஏற்ப வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது' என்றார்.

அரசு வசம் ஆன்லைன் டிக்கெட்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் கூறும் போது, சினிமா 'தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள் அவர்கள் வாங்கும் விலையில் இருந்து 70 சதவீதம் மிக, மிக அதிகமாக அநியாய விலையில் விற்கின்றனர். வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டுவரக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு தியேட்டர் பக்கமே வருவதில்லை. அதிலும் குறிப்பாக பெரிய படங்களாக இருந்தால் தியேட்டர்களுக்கு வருகிறார்கள், சிறிய படங்களாக இருந்தால் எவரும் எட்டிக்கூட பார்ப்பதில்லை. டிக்கெட்டுகளும் ரூ.100-க்கு பதிலாக ரூ.400, ரூ.500 என்று விற்கப்படுகிறது. ஆன்லைன் கட்டணம் என்று ஒரு டிக்கெட்டுக்கு ரூ.40 கூடுதலாக வசூலிக்கின்றனர். 5 டிக்கெட் என்றால் ஆன்லைன் கட்டணம் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது. இதை தியேட்டரை சேர்ந்தவர்களும், ஆன்லைன்காரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். வாகனம் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணம், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள், டீ, காபி செலவுகளுக்கு தனியாக ரூ.500 வேண்டும். மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் இல்லாமல் ஒரு குடும்பத்தினரால் தியேட்டருக்கு வரமுடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் திருட்டு சிடி அதிகரித்து சினிமா தொழிலே நசுங்கி வருகிறது. தொழிலை மேம்படுத்த ஆன்லைன் டிக்கெட் விற்பனை தனியாரிடம் இல்லாமல் அரசு வசம் கொண்டு வந்து அவற்றை முறைப்படுத்த வேண்டும். தின்பண்டங்கள் விலை, வாகன நிறுத்தும் கட்டணம் உள்ளிட்டவற்றை தியேட்டர்களில் குறைக்க வேண்டும்' என்றார்.


Next Story