கஞ்சா கடத்தல் ரெயிலாக மாறிய தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ்


கஞ்சா கடத்தல் ரெயிலாக மாறிய தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ்
x

கஞ்சா கடத்தல் ரெயிலாக தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மாறி உள்ளதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சேலம்

சூரமங்கலம்:-

கஞ்சா கடத்தல் ரெயிலாக தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மாறி உள்ளதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கஞ்சா எக்ஸ்பிரஸ்

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13351) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கஞ்சா கடத்தல்காரர்களின் பிரதான ரெயில் என்று கூறுமளவுக்கு கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளியில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் நடந்து வருகிறது.

குறிப்பாக கஞ்சா கடத்தும் கும்பலின் தொடர் கடத்தல் சம்பவங்களால் இந்த ரெயிலை கஞ்சா எக்ஸ்பிரஸ் என்று கூறும் நிலை உருவாகி உள்ளதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் அவ்வப்போது போலீசார் இந்த ரெயிலில் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். சில நேரங்களில் ஒரு சிலரை கைதும் செய்து வருகின்றனர்.

9 கிலோ கஞ்சா பறிமுதல்

இந்த நிலையில் நேற்று அதிகாலை ரெயில்வே போலீசார் முத்துவேல், கண்ணன், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சாமல்பட்டி- பொம்மிடி ரெயில் நிலையங்களுக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர்.

அப்போது முன்பதிவில்லா ரெயில் பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் சக பயணிகளிடம் விசாரணை நடத்தியதில் அதை கொண்டு வந்தவர் யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பையை திறந்து சோதனை செய்தனர்.

இதில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்த கஞ்சாவை சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதான கும்பல் சிக்குமா?

இந்த ரெயிலில் வடமாநிலங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தல் தொடர்கதை ஆகி வருகிறது. கஞ்சா கடத்தும் பிரதான கும்பல் தான் இதுபோன்ற சிறிய அளவிலான பையை போலீசார் கண்ணில் படும்படி வைத்துவிட்டு அதிகளவில் கஞ்சாவை கடத்தி வருகிறதா? என்று ரெயில்வே பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இதுபோன்று பிடிக்கப்படும் பை எந்த ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்றப்படுகிறது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் கண்டறிந்து கஞ்சா கடத்தும் பிரதான கும்பலை போலீசார் கைது செய்திடும் வரை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் கஞ்சா எக்ஸ்பிரஸ் என்ற அளவில் தான் இயங்கும் என்ற நிலை உள்ளதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ெபாதுவாக ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்காத பயணிகளை கிடுக்கிபிடியாக ரெயில்வே பணியாளர்கள் சோதனை செய்துபிடிக்கும் நிலையில் கஞ்சா கும்பலின் கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆகும்.


Next Story