களக்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கல், மேற்கு தொடர்ச்சி மலையில் எடுக்கப்பட்டது அல்ல; வனத்துறை அதிகாரி தகவல்


களக்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கல், மேற்கு தொடர்ச்சி மலையில் எடுக்கப்பட்டது அல்ல; வனத்துறை அதிகாரி தகவல்
x

களக்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கல், மேற்கு தொடர்ச்சி மலையில் எடுக்கப்பட்டது அல்ல என்று வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கல், மேற்கு தொடர்ச்சி மலையில் எடுக்கப்பட்டது அல்ல என்று வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

வைரக்கல் பறிமுதல்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழப்பத்தையில் வைரக்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், கீழப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகனின் (வயது 42) வீட்டில் பதுக்கி வைத்திருந்த வைரக்கல்லை பறிமுதல் செய்தனர். சுமார் அரை கிலோ எடையில் செம்பழுப்பு நிறத்தில் ஒருபுறம் மட்டும் பாலிஷ் செய்யப்பட்டு இருந்த அந்த வைரக்கல்லானது பல கோடி ரூபாய் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வேல்முருகனையும், அந்த வைரக்கல்லை விற்பதற்காக கொண்டு வந்ததாக, களக்காடு அருகே மஞ்சுவிளையைச் சேர்ந்த சுசில்குமாரையும் (57) போலீசார் கைது செய்தனர். அந்த வைரக்கல்லானது களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதி, அந்த வைரக்கல்லையும், கைதான 2 பேரையும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விற்க முயன்றபோது...

இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனச்சரகர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள், கைதான வேல்முருகன், சுசில்குமார் ஆகிய 2 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சுசில்குமாரின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு இறந்ததாகவும், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக குடும்ப சொத்து என்று கூறி, அந்த வைரத்தை சுசில்குமாரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுசில்குமார் அந்த வைரத்தை வேல்முருகன் மூலமாக விற்க முயன்றதும் தெரிய வந்தது.

மண்ணுளி பாம்பு விற்பனை கும்பலுடன் தொடர்பு

இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் கூறுகையில், ''கைதான வேல்முருகன், சுசில்குமார் ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கல்லானது களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. அது எங்கிருந்து வாங்கப்பட்டது?, எந்த வகையைச் சார்ந்தது? என்பதற்கான ஆதாரம் இல்லை. எனவே அந்த வைரக்கல்லை மீண்டும் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளோம்.

மேலும் கைதான வேல்முருகன், சுசில்குமார் ஆகிேயார் மண்ணுளி பாம்பு விற்பனை செய்கிறவர்களுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்பில் இருந்துள்ளனர்'' என்று கூறினார்.

இதையடுத்து கைதான வேல்முருகன், சுசில்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story