இடிந்து கிடக்கும் பாலத்தை சீரமைக்க வேண்டும்
இடிந்து கிடக்கும் பாலத்தை சீரமைக்க வேண்டும்
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி தென்பாதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வாய்க்காலில் இடிந்து கிடக்கும் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்துபோய் விட்டது
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் துவரங்குறிச்சி தென்பாதி கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த பகுதி விவசாயத்திற்கு, பாசனத்திற்கு நசுவினி ஆற்று கிளை வாய்க்கால் உள்ளது. மேலும் இந்த வாய்க்காலை கடந்து தெற்கே அந்த பகுதி மக்களுக்கான சுடுகாடு உள்ளது.
மேலும் அறுவடையாகும் நெல்லை அந்த வாய்க்காலைக் கடந்து தான் வீடுகளுக்கு கொண்டுவர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நசுவினி ஆற்று கிளை வாய்க்கால் பாலம் முற்றிலும் இடிந்து கிடக்கிறது. பாலத்தின் அடியில் போடப்பட்டுள்ள சிமெண்டு குழாய்கள் உடைந்து விட்டது. கீழே ஒரு சிமெண்டு குழாயில் மட்டுமே தண்ணீர் வெளியேறுகிறது.
பாலத்தை சீரமைக்க வேண்டும்
சமீபத்தில் பெய்த மழையினால் பாலத்தின் மேல் போடப்பட்டிருந்த மண் அடித்து செல்லப்பட்டதால் திரும்பவும் தேங்காய் நார், பனை மரங்கள் போட்டு போக்குவரத்துக்காக நடைபாதையில் மண்ணை போட்டு மூடியுள்ளனர். வரும் மழைக்காலத்தில் மண் பாலம் அடித்துச் செல்லப்பட்டால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே இந்த பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த பகுதி சுடுகாட்டு கொட்டகை கஜா புயலின் காரணமாக இடிந்து தரை மட்டமாகி விட்டது. இதனால் மழைக்காலங்களில் இறுதிச்சடங்கு செய்ய செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே அறுவடையாகும் நெல்லை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்க வாய்க்காலின் குறுக்கே சிறு பாலத்தை உடனடியாக புதிதாக கட்டி இடிந்து கிடக்கும் சுடுகாட்டுக்கு புதிய கொட்டகை கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த கோரிக்கை மனு மாவட்ட கலெக்டருக்கும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கும், கிராம மக்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.