பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்
தேவாலா-கரியசோலை இடையே பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே தேவாலாவில் இருந்து வாழவயல், தேவாலா அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண். 1,2,3,4, கரியசோலை, ராக்வுட் வழியாக நெலாக்கோட்டைக்கு நெடுஞ்சாலை செல்கிறது. நாடுகாணி, தேவாலா, நெலாக்கோட்டை வழியாக கூடலூருக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதனால் இந்த வழியாக கூடலூரில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பிற வாகனங்கள் சென்று வருகின்றன. பச்சை தேயிலை மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகள், டிராக்டர்கள் செல்கிறது. மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடந்து சென்று வருகின்றனர். தேவாலாவில் இருந்து கரியசோலை செல்லும் சாலையின் நடுவே தேவாலா பஜாரையொட்டி ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்தநிலையில் பாலம் பழுதடைந்து காணப்படுகிறது.
மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது, தவறி ஆற்றுக்குள் விழும் நிலை காணப்படுகிறது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, பழுதடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.