ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க அரசு வேட்டு வைத்துவிட்டது-மதுரை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க அரசு வேட்டு வைத்துவிட்டது என்றும், ஒப்பந்தகாரர்களிடம் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் எனவும் மதுரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க அரசு வேட்டு வைத்துவிட்டது என்றும், ஒப்பந்தகாரர்களிடம் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் எனவும் மதுரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பொதுக்கூட்டம்
மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பாக பழங்காநத்ததில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், பாஸ்கரன், தளவாய் சுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தால் தி.மு.க ஆட்சியை கைப்பற்றி விட்டது. தி.மு.க. வெறும் 125 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தமிழ்கத்தில் நிலைமை அப்படி தான் இருக்கிறது.
பேனா வைக்க அடம்
சாவி கொடுத்தால் பொம்மை சுற்றி வருவது போல மு.க.ஸ்டாலின் காலையில் இருந்து மாலை வரை சுற்றி வருகிறார். அதனால் மக்களுக்கு என்ன பயன்? தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள், இப்போது வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்று சொல்ல தொடங்கி விட்டனர். மதுரையில் உள்ள ஒரு அமைச்சர், அறிவுஜீவி. அவருக்குத்தான் அறிவு உள்ளது என்கிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இந்த 16 மாதங்களில் தி.மு.க. அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? கருணாநிதிக்கு நினைவு மண்டபமும், மதுரையில் நூலகமும்தான் கட்டி வருகிறார்கள். இப்போது கடலில் பேனா வைப்பேன் என்று அடம்பிடித்து கொண்டு இருக்கிறார்கள். எழுதாத பேனாவுக்கு எதுக்கு ரூ.89 கோடியில் திட்டம். தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். பஸ்களில் இலவச பயணம் செய்யும் பெண்களை அமைச்சர் பொன்முடி இழிவாக பேசுகிறார். இது தான் திராவிட மாடல்.
20 சதவீத கமிஷன்
மதுரை அமைச்சர் ரூ.30 கோடியில் பெரிய அளவில் மகன் திருமணத்தை நடத்தி இருக்கிறார். அவருக்கு எங்கிருந்து வந்தது இந்த பணம்? எல்லாம் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்தான். கோவை மாநகராட்சியில் ரூ.48 கோடி மதிப்பிலான 133 வேலைகளுக்கு இதுவரை 11 முறை டெண்டர் விடப்பட்டும் பணிகளை யாரும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் தி.மு.க. அரசு, ஒப்பந்தகாரர்களிடம் 20 சதவீத கமிஷன் கேட்பது தான். கரூரில் போடாத சாலைக்கு நிதி எடுக்கிறார்கள். அ.தி.மு.க.வை ஊழல் செய்தது என்று சொல்வதற்கு தி.மு.க.விற்கு எந்த தகுதியும் கிடையாது. தி.மு.க அரசு ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.