திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்
இடிகரை
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தார். அவர், கோவை வேலாண்டிபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது
கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி கனரக வாகனங்கள் இயங்குவதால் விபத்து ஏற்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தடாகம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தி.மு.க. மாடல், ஓராண்டு சாதனை என்று தி.மு.க.வினர் தான் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெற வில்லை. ஒன்றியம், மாடல் என்ற வார்த்தைகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. சட்டம் ஒழுங்கு மோசமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.
விசாரணை என்று அழைத்து சென்று கொலை செய்ய கூடிய நிலையே தற்போது உள்ளது. குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கம் வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை கூட திறக்கப்பட வில்லை. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மட்டும் வருகிறார்கள். அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.