பிரதமர் மோடியின் திட்டங்களை தி.மு.க. அரசு செய்ததாக பறைசாற்றுகிறது
பிரதமர் மோடியின் திட்டங்களை தி.மு.க. அரசு தாங்கள் செய்ததாக பறை சாற்றுகிறது என பா.ஜ.க. இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா கூறினார்.
விருதுநகர்,
பிரதமர் மோடியின் திட்டங்களை தி.மு.க. அரசு தாங்கள் செய்ததாக பறை சாற்றுகிறது என பா.ஜ.க. இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா கூறினார்.
வரவேற்பு
கன்னியாகுமரியிலிருந்து மத்திய பா.ஜ.க. அரசின் 8-ம்ஆண்டு சாதனையை விளக்கும் வகையில் யாத்திரை மேற்கொண்டு உள்ள பா.ஜ.க. இளைஞர் அணியினர் நேற்று விருதுநகர் வந்தனர். விருதுநகர் மருத்துவக்கல்லூரி முன்பு விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து 800 கி.மீ. இருசக்கர வாகனப்பேரணி நடத்த திட்டமிட்டு டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் அனுமதி கோரினோம். அவர் அனுமதி அளிக்கவில்லை. கன்னியாகுமரியிலிருந்து விருதுநகர் வரை எந்த மாவட்டத்திலும் போலீசார் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே காரில் வருகிறோம்.
பிரதமரின் திட்டங்கள்
தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. எங்கு சென்றாலும் மோடியின் திட்டம் தான் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் தி.மு.க. அரசு மோடியின் திட்டங்களை தாங்கள் செய்ததாக பறைசாற்றி கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட மேற்பார்வையாளர் வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.