பணியில் இருந்த டாக்டர், செவிலியர்கள் பணியிட மாற்றம்
வந்தவாசியில் 6 மாத ஆண் குழந்தை பலியானதை தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர், செவிலியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் 6 மாத ஆண் குழந்தை பலியானதை தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர், செவிலியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
6 மாத குழந்தை பலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டைக்குள தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம்மூசா. இவரது மனைவி ஜபீனா. இவர்களது 6 மாத ஆண் கைக்குழந்தை முகமதுரசூலுக்கு கடந்த 23-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, பெற்றோர் அந்த குழந்தையை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று அதிகாலை உயிரிழந்தது.
இந்த நிலையில் குழந்தை முகமதுரசூலின் உயிரிழப்புக்கு இரவு பணியிலிருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் என புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், குழந்தை முகமதுரசூலின் பிணத்துடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இணை இயக்குனர் விசாரணை
தகவலறிந்து அங்கு சென்ற செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பாபுஜி, துணை இயக்குனர் ஏழுமலை, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு குழந்தை முகமதுரசூலின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து முகமதுரசூலின் உறவினர்கள், இரவு பணியிலிருந்த டாக்டர், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பாபுஜி விசாரணை மேற்கொண்டார்.
பணியிட மாற்றம்
இந்த நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் முருகேஷ் பரிந்துரையின்பேரில் பணியில் இருந்த டாக்டர் திவ்யா, செவிலியர்கள் சத்தியா, சார்மிலா ஆகிய 3 பேரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட இணை இயக்குனர் பாபுஜி உத்தரவிட்டார்.