நாய் பொம்மை முகமுடி அணிந்து வந்துமனு கொடுத்த உறுப்பினர்


நாய் பொம்மை முகமுடி அணிந்து வந்துமனு கொடுத்த உறுப்பினர்
x

பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டத்துக்கு நாய் பொம்மை முகமுடி அணிந்து வந்த உறுப்பினர், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி மனு அளித்தார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டத்துக்கு நாய் பொம்மை முகமுடி அணிந்து வந்து உறுப்பினர், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி மனு அளித்தார்.

நகர் மன்ற கூட்டம்

பட்டுக்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் குமரன், என்ஜினீயர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:-

நாடிமுத்து (த.மா.கா.) பட்டுக்கோட்டை நகரில் தெருவுக்கு 100 நாய்கள் சுற்றித்திரிகின்றன. பலமுறை சொல்லியும் நாய்கள் பிடிக்கப்படவில்லை. நாய்களால் தினந்தோறும் 5 விபத்துகள் நடக்கிறது. சாலையில் மாடுகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.

ஆணையர்:-கடந்த மாதம் 18 மாடுகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பி உள்ளோம். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நடைபாலம்

ரவிக்குமார் (தி.மு.க.):- பெருமாள் கோவில் குளம் தூர்வாரப்படாததால் மாசு அடைந்துள்ளது. திருவிழா வர இருப்பதால் அசுத்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணகுமார் (அ.தி.மு.க.):- லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு 22-வது வார்டு பகுதியில் இருந்து மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் 1 கி.மீ.தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே ஆற்றின் குறுக்கே நடை பாலம் அமைத்து தர வேண்டும்.

ராமலிங்கம் (தி.மு.க.):-செட்டியார் தெருவில் குப்பைகள் அள்ள யாரும் வருவதில்லை. போஸ்ட் ஆபீஸ் ரோடு சாக்கடை வாய்க்கால் தூர்வார வேண்டும்.

சதாசிவகுமார் (வி.சி.க):-எனது வார்டில் போட்டி தேர்வு மையம் அமைக்க வேண்டும்.

நாய் பொம்மை முகமுடி அணிந்து வந்த உறுப்பினர்

ஆணையர்:-ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பில் ஆர்.வி நகரில் அறிவு சார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

நளினி சம்பத் (அ.தி.மு.க.):- மகளிர் உரிமைத்தொகை பட்டியல் முழுமை அடைந்த பின் பட்டுக்கோட்டை பொதுமக்களின் ஆதரவுடன் அனைத்து பகுதி நகர் மன்ற உறுப்பினர்களிடம் பட்டியல் வெளிப்படை தன்மையை நேர்மையுடன் வெளியிட வேண்டும்.

நாடிமுத்து (த.மா.கா.) உறுப்பினர் நாய் முகமூடி அணிந்து கொண்டு மற்ற உறுப்பினர்களுடன் சென்று நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:- நகராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் நாய், மாடு, பன்றிகளை பிடிக்கவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் நாய்கள் குழந்தைகளை கடிப்பதும், மாடுகள் குழந்தைகள் மற்றும் முதியோரை தாக்குவதும் தினசரி செய்தித்தாள்களில் வந்த வண்ணமாய் உள்ளது. இதை கண்டித்தும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாய், மாடு, பன்றிகள் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வந்துள்ளேன். ஆகையால் நாய்கள், மாடுகள் மற்றும் பன்றிகளை பிடித்து பாதுகாப்பான இடத்தில் அடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story