பஸ்சில் ஏறி, பாசப்போராட்டம் நடத்தி எஜமானியின் வெளியூர் பயணத்தை தடுத்த நாய்
பஸ்சில் ஏறி, எஜமானியின் வெளியூர் பயணத்தை தடுத்து தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்ற நாயின் பாசப்போராட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மூதாட்டி வளர்த்த நாய்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவா், தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி வெளியூர் செல்வதற்காக, ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து, அவரது நாயும் பஸ்நிலையத்துக்கு வந்தது.
ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து, திண்டுக்கல் செல்வதற்கு தயாராக நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் மூதாட்டி ஏறி அமர்ந்தார். தனது எஜமானி தன்னை விட்டு பிரிந்து செல்வதை அறிந்த நாய் வேதனை அடைந்தது. இதனால் அந்த பஸ்சின் அருகே நின்று குரைத்தது.
மறியல் செய்வதை போல...
பஸ்சை விட்டு கீழே இறங்கி வீட்டுக்கு வருமாறு மூதாட்டியை அழைப்பது போல அந்த நாயின் செயல்பாடு இருந்தது. ஆனால் மூதாட்டியோ, வீட்டுக்கு செல்லுமாறு அந்த நாயை பலமுறை விரட்டினார். இருப்பினும் அவரது முயற்சி தோல்வியையே சொந்தமாக்கியது.
பஸ்நிலையத்தை விட்டு ஒரு அடி கூட அந்த நாய் எடுத்து வைக்கவில்லை. மூதாட்டியை விட்டு பிரிந்து செல்ல நாய்க்கு மனம் இல்லை. மறியல் செய்து கோஷம் எழுப்புவதை போல, மூதாட்டி அமர்ந்திருந்த பஸ்சின் முன்பு நின்று கொண்டு தொடர்ந்து நாய் குரைத்து கொண்டே இருந்தது.
பிரிந்து செல்ல மனமின்றி...
பஸ்சை நகர்த்த முடியாத தர்ம சங்கடமான நிலைக்கு டிரைவர் தள்ளப்பட்டார். இதனால் 10 நிமிடங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. பஸ்சின் முன்பும், பக்கவாட்டு பகுதியிலும் சுற்றி வந்த நாய் படிக்கட்டு வழியாக ஏறி உள்ளே சென்றது.
இதனை கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நாயை விரட்ட முயன்றனர். ஆனால் அந்த நாயோ, தனது எஜமானியான மூதாட்டியை உரசியபடி நின்று கொண்டது. மூதாட்டியை பிரிந்து செல்ல மனம் இன்றி வாலை ஆட்டிக்கொண்டே இருந்தது. பஸ்சில் இருந்தவர்களுக்கு பயமும் பரபரப்பும் தொற்றி கொண்டது.
துள்ளி குதித்த நாய்
இதற்கிடையே அந்த மூதாட்டியை பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு சக பயணிகள் வலியுறுத்தினர். நாயும் ஒரு உயிர் தானே, அது பஸ்சில் வந்தால் என்ன தவறு என்று அந்த மூதாட்டி தனது செல்லப்பிராணிக்காக பயணிகளிடம் வாதிட்டார். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனையடுத்து வேறு வழியின்றி, அந்த மூதாட்டி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். இதனைக்கண்ட நாய் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தது. மூதாட்டி மீது தனது முன்னங்கால்களை தூக்கி வைத்தபடி பாசமழை பொழிந்தது. அவரது கையை பிடித்து அழைத்து செல்வதை போல, பொய்யாக கடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
பாச உணர்வு
தனது வெளியூர் பயணத்தை ரத்து செய்து விட்டு மூதாட்டி தனது வீட்டை நோக்கி நடையை கட்டினார். தன்னை விட்டு பிரிந்து செல்ல முயற்சித்த எஜமானியை, பஸ்சில் இருந்து இறக்கி விட்ட மகிழ்ச்சியில் நாயும் உற்சாகமாக அவருடன் சென்றது.
அதன்பிறகே அந்த பஸ், அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் நோக்கி சென்றது. மூதாட்டியின் வெளியூர் பயணம் ரத்தாகி இருப்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த நாயின் பாச உணர்வை கண்டவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
மூதாட்டியோ, சக பயணிகளோ விரட்டியும் அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்து, தனது தொடர் முயற்சியால் எஜமானியை வீட்டுக்கே அழைத்து சென்ற அந்த நாயின் உணர்வு மெய் சிலிர்க்க வைத்து விட்டது என்றே சொல்லலாம்.
வைரலான வீடியோ
ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் மூதாட்டிக்கும், நாய்க்கும் இடையே நடந்த ½ மணி நேர பாசப்போராட்டத்தை அந்த பஸ்சில் அமர்ந்திருந்த வடமதுரையை சேர்ந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார்.
பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.