கழுதை பாலுக்கு கடும் கிராக்கி


கழுதை பாலுக்கு கடும் கிராக்கி
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு சங்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு சங்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கழுதை பாலுக்கு கிராக்கி

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே பனிப்பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கழுதை பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது. இதற்காக குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் கழுதை பாலின் விலையோ விண்ணை தொடும் அளவுக்கு உள்ளது. அதாவது ஒரு சங்கு கழுதை பால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் விலையை பற்றி கவலை கொள்ளாமல் கழுதை பால் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஊர், ஊராக சென்று விற்பனை

குமரியில் பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், எட்டாமடை பகுதிகளில் தற்போது கழுதை பால் கிடைக்கிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் கழுதைகளை ஊர் ஊராக அழைத்து சென்று அதன் பாலை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, 'குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாகவே கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். மக்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் பால் கொடுக்க முடியவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் பால் விற்று விடுகிறது' என்றனர்.


Next Story