ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு


ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு
x

தக்கோலத்தில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.

ராணிப்பேட்டை

30 பவுன் நகை திருட்டு

தக்கோலம் காந்தி நகர் பகுதியை சார்ந்தவர் உமா (வயது 50). முருங்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ஜான்சன். சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை ஆசிரியை உமா வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றார்.

பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் பணம் ரூ.1,000 திருட்டு போனது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தக்கோலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், தக்கோலம் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை மேற்கொண்டனர்.

மேலும், இது குறித்து உமா தக்கோலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்


Next Story