வடிகால் வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கப்படும்


வடிகால் வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கப்படும்
x

பண்ருட்டியில் அனைத்து வார்டுகளிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி சீரமைக்கப்படும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

கடலூர்

பண்ருட்டி

ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி நகரசபை அலுவலகத்தில் நகர வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், தாசில்தார் சிவகார்த்திகேயன், நகரசபை தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வரவேற்றார்.

கூட்டத்தில் பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மழைநீர் வடிகால்களை சீரமைப்பது குறித்தும், போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் சி.வெ.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்ருட்டியில் அனைத்து வார்டுகளிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரி சீரமைக்கவும், புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வார்டுகளில் தார் சாலை வசதி, சிறுபாலம் அமைத்தல் ஆகிய பணிகள் குறித்து திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கப்படும்.

மேலும் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.80 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை வருகிற 7-ந்தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story