திராவிட மாடலே அனைத்து மாநிலங்களுக்கான 'பார்முலா'; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை


திராவிட மாடலே அனைத்து மாநிலங்களுக்கான பார்முலா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
x

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ‘பார்முலா’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

10 ஆண்டு கால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு மக்கள் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்.

ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சி பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு மே 7-ந்தேதி முதல், ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

தி.மு.க. தொண்டர்களின் கடமை

மக்களுக்கான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்த திட்டங்களின் பலன்களை மக்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டியது தி.மு.க. தொண்டர்களின் கடமை.

நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில், திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொலிகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

காணொலி வாயிலாக பதில்

அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும், அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொலி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது.

நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றி இருக்கும் திட்டங்களை, 2 ஆண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றை பதியச் செய்திடும் கடமை, தொண்டர்களாகிய உங்களுக்கும், எனக்கும் இருக்கிறது. அதனால்தான், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய 3 நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மே 7-ந்தேதி சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். அதே நாளில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அதுபோலவே மே 8, 9 ஆகிய நாட்களிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் தொடர்கின்றன.

மக்களை தேடி நாம் பயணிக்கிறோம். அவர்களுக்காக நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைக்க இருக்கிறோம். ஒவ்வொரு அணியினரும் தி.மு.க.வின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

திராவிட மாடல் அரசின் சாதனை

2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய தி.மு.க. சொற்பொழிவாளர்கள் உரிய தயாரிப்புகளுடனும், புள்ளிவிவரங்களுடனும் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அவற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், பொறுப்பான முறையிலும் எடுத்துரைக்க வேண்டும். உங்களது பேச்சை நாடே உற்று நோக்குகிறது என்பதை உணர்ந்து நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொருவரிடமும் நீங்கள் கொண்டு சேர்த்திட வேண்டும்.

அதே நேரம் உங்களது பேச்சுகளை எதிர்க்கட்சியினரும், திருகு வேலைகளில் ஈடுபடும் சில ஊடகங்களும், வெட்டியும், ஒட்டியும் தவறாகப் பொருள்படும்படி மாற்றி பரப்பிட காத்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு கண்ணியம் குன்றிடாமல் கருத்துகளை மக்களிடம் முன்வையுங்கள். நாம் மக்களை நம்புபவர்கள்; எதிர்க்கட்சியினரைப் போல பொய்களை அல்ல என்பதால் மக்களிடம் நம் சாதனைகளைக் கொண்டு சேருங்கள்.

ரூ.1,000 உரிமைத்தொகை

எதிர்வரும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் மக்களின் இதயத்தில் பதிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது சொற்பொழிவாளர்களின் கடமை.

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவச திட்டங்கள் என்றும், இலவச திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதில் இருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கான 'பார்முலா'

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக 'பார்முலா' என்பது உறுதியாகி இருக்கிறது. இருளை விரட்டிய 2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. 5 ஆண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும்.

அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story