மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்யாததால் கலங்கலாக வரும் குடிநீர்
மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்யாததால் கலங்கலாக குடிநீர் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர், காமராஜபுரம், கே.ஆர்.எஸ்.நகர், பெரியமிளகு பாறை, செல்வநகர், பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இங்கு இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மாதந்தோறும் சுத்தம் செய்யாததால் தண்ணீர் மஞ்சள் நிறத்தில், கருப்பு மண்கலந்து வருவதால் இந்த தண்ணீரை குடிநீர் மற்றும் இதர தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப் பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் தண்ணீரை குடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.