நெல்லையில் திடீரென ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
நெல்லையில் நேற்று திடீரென குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சந்திப்பு பகுதி ரோடு குளமாக மாறியதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
நெல்லை மாநகரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு தற்போது தண்ணீர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் சந்திப்பு பகுதியில் தச்சநல்லூர் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், அதில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யவும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அரைகுறையாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் தற்போது மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்துக்கு செல்லும் குழாய் முழுமையாக பதிக்கப்பட்டிருப்பதாக கருதி அந்த குழாயில் நேற்று காலை திடீரென்று தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த குழாய் பதிக்கப்பட்ட இறுதியின் திறந்த பகுதி வழியாக தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வெளியேறியது. இதனால் தண்ணீர் ஆறு போல் ஓடி சந்திப்பு மதுரை ரோட்டுக்கு வந்தது. அங்கு ஏற்கனவே குழாய் பதிக்க தோண்டி எடுத்திருந்த மண்ணை, ரோட்டின் குறுக்கே குளக்கரை அமைத்தது போல் கொட்டி வைத்திருந்தனர். இதனால் அம்பேத்கர் சிலை, த.மு. ரோடு வரை குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் சிரமப்பட்டு சென்றன. பொது மக்களால் சந்திப்பு ரெயில் நிலையம் பகுதிக்கு செல்ல முடியவில்லை. கடும் அவதிப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாய்களை பதிக்கும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது தச்சநல்லூர் பகுதிக்கு தண்ணீரை திறந்து விடுவதற்கு பதிலாக, இந்த குழாயில் தண்ணீரை திறந்து விட்டதாக கூறினார்கள். பின்னர் அந்த வால்வை அடைத்து தண்ணீரை நிறுத்தினார்கள். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் தேங்கிய தண்ணீரை நீண்ட நேரம் போராடி வடிய வைத்தனர்.