தண்டவாளம் அருகே படுத்து ஓய்வு எடுத்தபோது நெல் அறுவடை எந்திர டிரைவர் ரெயில் மோதி பலி சின்னசேலம் அருகே பரிதாபம்
சின்னசேலம் அருகே தண்டவாளம் அருகே படுத்து ஓய்வு எடுத்தபோது நெல் அறுவடை எந்திர டிரைவர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). நெல் அறுவடை எந்திர டிரைவரான இவர் நேற்று காலை சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கி பிளஸ்-2 படிக்கும் தனது மகன் சந்தோசை பார்த்துவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். சின்னசேலம் அடுத்த அம்மையகரம் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது வெயில் கொடுமை தாங்க முடியாமல் அவதிப்பட்ட பெரியசாமி சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு செல்ல முடிவு செய்து, அங்குள்ள தண்டவாளம் அருகே படுத்திருந்தார். சற்று நேரத்தில் அவர் அயர்ந்து தூங்கி விட்டார்.
அந்த சமயத்தில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த ரெயில் பெரியசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.