மழைநீர் ஒழுகும் அரசு பஸ்சுடன் கலெக்டர் அலுவலகம் வந்த டிரைவர்
பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விரக்தியில், மழைநீர் ஒழுகும் அரசு பஸ்சுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து டிரைவர் புகார் அளித்தார்.
மழைநீர் ஒழுகும் பஸ்
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து குமுளி-திண்டுக்கல் இடையே பஸ் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது.
பெரியகுளத்தை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பவர் பஸ்சை ஓட்டினார். அப்போது மழை பெய்ததால் பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகியது. இதனால் சிரமப்பட்ட பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது டிரைவர் முருகேசனுக்கு விரக்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே அந்த பஸ், திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்தது. திண்டுக்கல்லில் பயணிகள் இறங்கியதும், டிரைவர் முருகேசன் பஸ்சை நேராக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஓட்டி சென்றார்.
புகார் மனு
மேலும் சேதமடைந்த அரசு பஸ்சை இயக்குவதால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்தார். பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளை சந்தித்து பஸ்சின் நிலைமை பற்றி முறையிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குமுளி-திண்டுக்கல் இடையே இயக்கப்படும் அரசு பஸ்சின் மேற்கூரை, பக்கவாட்டு பகுதி, பக்கவாட்டு கண்ணாடிகள், முகப்பு கண்ணாடி, டிரைவர் இருக்கை, மீட்டர் போர்டு உள்ளிட்டவை சேதமடைந்து உள்ளன. இதனால் பஸ் செல்லும் போது பயங்கரமாக சத்தம் வருகிறது.
மழை பெய்யும் போது மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகுகிறது. சக்கரம் சுழலும் போது தண்ணீர் பஸ்சுக்குள் வருகிறது. இதனால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற பஸ்களை இயக்குவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, அரசுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு கூடுதல் வேலை தருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.