தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வியாழக்கிழமை நிறைவு
தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வியாழக்கிழமை நிறைவு பெறுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2023 பணிகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணியானது கடந்த மாதம் 9-ந் தேதி முதல் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடந்து வருகிறது. நமது மாவட்டத்தில் இதுவரை 62.28 சதவீதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்திடவும் மனுக்கள் பெற்றிட சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
இன்று நிறைவு
இதுவரை நாளது முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 ஆயிரத்து 222 பேரும், இறப்பு மற்றும் குடியிருப்பு இல்லாத காரணத்தினால் பெயரினை நீக்கம் செய்ய 6 ஆயிரதது 303 பேரும், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் நகல் அடையாள அட்டை கோரி 9 ஆயிரத்து 289 பேரும் ஆக மொத்தம் 35 ஆயிரத்து 814 பேர் மனு அளித்து உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணியானது இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்ய உடனடியாக மனு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் www.nvsp.inஎன்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி குறித்து பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.