மின்ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
மின்ஊழியர்கள் 10-ந் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் வேலூரில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில இணை செயலாளர் பா.செந்தில் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ஏ.சேக்கிழார் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும்.
பணி குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலை நிறுத்த போராட்டம்
கூட்டத்தில், பொது செயலாளர் சேக்கிழார், 'பேசுகையில், மின் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது இதுதொடர்பாக நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் வருகிற 10-ந்தேதி தமிழகம் முழுவதும் மின்ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்' என்றார்.