மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு
விவசாயிகள் சங்கத்தினர் மனு
மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
மின்சார மசோதா
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலின்போது விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியான நெல் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500, கரும்பு டன் ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவதுடன் நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
விலை நிர்ணயம்
விவசாயிகளின் 13 மாத கால போராட்டத்தின்போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் மத்திய அரசு 3 சட்டங்களை ரத்து செய்தும், ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அனைத்து விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்ட அங்கீகாரம் மற்றும் இதர கோரிக்கைகளையும், விவசாயிகளின் நம்பகத்தன்மை பெற்ற புதிய கமிட்டி அமைத்து நிறைவேற்றிட வேண்டும்.
அரசு கோவில், மடம், அறக்கட்டளை, வக் போர்டு சாகுபடியில் ஏற்பட்ட தொடர் பேரிடர் பாதிப்பு ஆண்டுகளுக்குரிய குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்திடவும், வருவாய் கோர்ட்டுகளை மூடிடவும் வேண்டும். தேங்காய் விளைச்சல் சீராக இருந்தும் வெளிமாநிலம் செல்வது குறைந்ததால் கடந்த பல மாதங்களாக கட்டுப்படியான விலை இல்லை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருந்தும் கொப்பரை தேங்காயை கிலோ ரூ.150 விலை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.