அரசு பஸ்சை வழிமறித்த யானை
அரசு பஸ்சை யானை வழிமறித்தது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் யானைகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக இந்த சாலை வழியாக கரும்புகளை கொண்டு செல்லப்படும் லாரிகளை வழிமறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி யானைகள் தின்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் பகுதிக்கு வந்தன. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தன. அப்போது அந்த வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சை கண்டதும் அதில் ஒரு யானை திடீரென அதை வழிமறித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். சிறிது நேரம் பஸ்சின் முன்புறத்திலேயே அந்த யானை நின்று கொண்டிருந்தது. பின்னர் அந்த யானை மற்ற 2 யானைகளுடன் சேர்ந்து அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.