பண்ருட்டியில் பரபரப்பு தூக்கில் பிணமாக தொங்கிய தனியார் பயிற்சி மைய ஊழியர் உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டம்


பண்ருட்டியில் பரபரப்பு  தூக்கில் பிணமாக தொங்கிய தனியார் பயிற்சி மைய ஊழியர்  உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டம்
x

பண்ருட்டியில் தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்


பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் வினோத் பாபு (வயது 35). என்ஜினீயர். இவரது மனைவி ரமணி(26). வினோத் பாபு நெய்வேலி ஆர்ச் கேட் அருகே உள்ள ஒரு கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியராக பணிபுரிந்தும் வருகிறார். தற்போது இவர் திருவதிகை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதிக அளவு சேர்க்கவில்லை என்று கூறி வினோத்பாபுவை அவரது அலுவலக மேலாளர் திட்டியதாக கூறப்படுகிறது.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வினோத் பாபு, அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதுபற்றி அறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் வினோத்பாபுவின் சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டும், அவர் பணிபுரியும் பயிற்சி மையத்தின் மேலாளரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு வினோத் பாபுவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதை தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் கும்பகோணம் ரோடு, லிங்க் ரோடு ரவுண்டானா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், தனியார் பயிற்சி மையத்தின் மேலாளரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உரிய விசாரணை வேண்டும்

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரமணி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதில், கணவர் வினோத் பாபுவை அவர் வேலை செய்துவரும் நிறுவன மேலாளர் நீ எல்லாம் எதற்கு வேலைக்கு வருகிறாய், வேலையை விட்டு ஒழிந்து போ என திட்டினார். மேலும் நாளைக்கு வேலைக்கு வரக்கூடாது எனவும் போனில் கூறியதாக எனது கணவர் என்னிடம் கூறினார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். எனவே எனது கணவரின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, காரணமானர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story