மின்வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
ஆரணி மின்வாரிய அலுவலகம் முன்பாக அலுவலர்கள், ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
ஆரணி மின்வாரிய அலுவலகம் முன்பாக அலுவலர்கள், ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவரது மகன் தினேஷ்குமார் (வயது 13). இவன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 2-ந்தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது உயர் மின் அழுத்தம் கம்பி தாழ்வான நிலையில் சென்றதாகவும், அங்கு சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுதொடர்பாக களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் லெனின், அங்கு பணிபுரியும் ஆக்க முகவர் பி.அய்யாவு, மின்பாதை ஆய்வாளர் எம்.ரவி ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதும், பிரிவு பொறியாளர் மலைமதியிடம் விளக்கம் கேட்டும் தகவல் அனுப்ப தயாராக இருந்ததாக தெரிகிறது.
தர்ணா போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து உதவி செயற் பொறியாளர் லெனினிடம், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் போது 3 பேரையும் இடமாற்றம் செய்வது அல்லது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யலாம். ஆனால் ஊழியர்கள் மீது பணியிடை நீக்கமும், அதிகாரியிடம் விளக்கம் கேட்பதும் முறையல்ல என பேச்சுவார்த்தை நடத்தினர். இதுசம்பந்தமாக முறையான பதில் செயற் பொறியாளரிடம் இருந்து வந்ததும் நடவடிக்கை எடுக்கிறேன் என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கூட்டமைப்பு சார்ந்த மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் அலுவலர் அறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
பின்னர் பணியில் கையெழுத்து போட்டுவிட்டு பணி புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்தனர். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.